படைப்புலகத் தீண்டாமை

மு.கு : பழைய ட்விட்லாங்கர். முதல் பதிப்பு : http://www.twitlonger.com/show/n_1rrdbts

தலைப்பிட்டமைக்கு @tamilravi க்கு நன்றி


10 நவம்பர் 2013

காலையில் @nchokkan காப்புறிமையுள்ள படம்/இசை/புத்தகங்களைப் பதிவிறக்கம் செய்வதை அரிசி திருடவதனுடன் ஒப்பிட்டார்.

படைப்பு ‘திருட்டு’ (piracy) காரணமாக வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்பது அவரது (99.99% படைப்பாளிகளின்) முதல் வாதம். இதனால் பதிவிறக்கம் செய்பவர்கள் இவர்கள் உலகில் திருடர்களாகின்றன. இந்த வாதத்தின் மறுப்பிற்குச் செல்வதற்கு முன்பு அவரே அவரின் ‘வருவாய் இழப்பு’க் கோட்பாட்டை முறியடித்தார். 70% பேர் அவருடைய ஆக்கங்களைப் பழைய புத்தகக் கடையில் வாங்குவது சரி என்று கூறினார். 70% பேர் தராத வருவாய் இழப்பைப் பற்றிக் கவலைப்படாமல் அதைச் சரி என்றும் கூறும் இவர், இணையத்தில் இருந்து ‘திருடும்’ நடப்பதால் 10% ராயல்டி இழப்பு என்று உணர்ச்சிபொங்கலுடன் குமுறுகிறார். இதிலிருந்து இவர் இவருக்கோ பதிப்பாளருக்கோ பணம் கிடைப்பது பற்றி அதிகம் கவலைப்படவில்லை(கவலைப்படுகிறார், ஆனால் அது முதல் கவலையில்லை), ஆனால், வாசகனிடமிருந்து பணம் எனக்கு வரவில்லை என்றால் கூடப் பராவாயில்லை அவன்(ள்) செலவு செய்து தான் என் படைப்பை அடைய வேண்டும் என்பது. ஏனெனில் ‘இலவசம்’ என்றால் மதிப்பில்லை என்ற நம்முடைய மனக்கட்டமைப்பே. மனிதர்களைப் பணம் மூலம் மட்டும் தான் மதிக்க வேண்டும்/முடியும் என்ற உலகைத் தாண்டி வந்துவிட்டோம் நாம். இந்த உரையாடலே அதற்குச் சாட்சி, யாருன்னே தெரியாத ஒருத்தரக் கூட ‘மதித்து’ நீங்களும் நானும் (மற்றும் பலரும்) பணத்தைப் பற்றிப் பேசாமலே அரட்டை அடிக்கிறோம். இதுவே அந்தக் காலத்தில் எத்தனை எழுத்தாளர்கள் வாசகர்களுக்குப் பதில் கடிதம் போட்டார்கள். எவனோ ஒருத்தன் உளரி விட்டு போறான்னு இல்லாம நீங்களும் என்னை மதித்தானே இதைப் படிக்கின்றீர்கள்.

அதுக்காகப் படைப்பாளி சோறு சாப்பிடாம பிச்சைக்காரன வாழ வேண்டும் என்று நான் சொல்லவில்லை. கலைத்துறையில் இருப்பதாலேயே என்னுடைய ஒரு நாள் / ஒரு வருட உழைப்பிற்கு மற்றவர்கள் எனக்கு வாழ்நாள் முழுவதும் பணம் அளித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று கூறுவது நிலச்சுவாந்தார் / ஜமீன்தாரி முறைக்குத் தான் இட்டுச் செல்லும். (இதில் உண்மையான படைப்பாளிக்கு ‘ராயல்டி’ செல்லாமல் நிறுவனங்களிடையே மாட்டிக்கொள்வது வேறு கொடுமை.) எல்லாப் படைப்புகளையும் விற்பனை செய்ய உங்களுக்கு முழு உரிமை உள்ளது. ‘ஏழைகள்’ அவரவர் வசதிக்கேற்றார்போல் வாங்கிக் கலைப்படைப்புகளை நுகரட்டும் என்று சொல்வது ‘நவீனத்தீண்டாமை’ இல்லையா? இதே வாதத்தைப் பாட புத்தகங்களுக்கு எடுத்துச் சென்றால் இத்தனை பேர் இந்தியாவில் IT துறையில் இருப்பார்களா? (கடனில் செலுத்தும் கல்லூரிக் கட்டணம் லட்சங்களைத் தாண்டி, வருடத்திற்குப் புத்தகம் மட்டுமே பல ஆயிரமாகும் / மென்பொருள் சில லட்சங்களாகும்.)

சினிமா திரையரங்கில் பார்க்க முடியவில்லை என்றால் தொலைக்காட்சில வரும். இசை வானொலியில் வரும், இது ‘ஏழைக்கு’ முற்றிலும் இலவசமில்லை / சுய விருப்பம்(choice) இல்லை என்றாலும் கூட எட்டும் தூரத்தில் உள்ளது (கலைஞர்  தமிழக அரசு இலவச தொலைக்காட்சிக்கு அப்புறம்) புத்தகம் நூலகத்தில் இருக்கணும். ஆன மற்ற இரண்டு கலைகளும் (சினிமா / இசை) அரசை எதிர்பார்க்காமல் தொலைக்காட்சி / வானொலி சூழ்மண்டலங்களை(ecosystem) வளர்த்து அதன் மூலமாக ‘ஏழைகளுக்கு’ப் படைப்புக்களை எடுத்துச் செல்கின்றது. இந்த இரண்டும் முழுமையான சரியான உதாரணங்கள் இல்லை என்றாலும் கூட, ‘ஏழைகளுக்கு’ப் படைப்புக்களின் குறைந்தபட்ச அணுக்கம் கிடைக்க உதவுகிறது. ஏன் ஒவ்வொரு பதிப்பகமும் நூலகத்தை வளர்ப்பதில்லை? உங்களைச் சேவை செய்ய சொல்லவில்லை, ஆன ஒவ்வொரு தொழிலுக்கும் சமூகப் பொறுப்பு இருக்கு. நூலகத்தை வளர்ப்பது அரசின் கடமை மட்டும் அல்ல, பதிப்புத்துறையினரின் கடமை கூட. உங்கள் கடமைகளைச் செய்த பிறகு உரிமைகளைக் கோருங்கள்.

ஒரு படைப்பாளிக்குக் காப்புரிமை அளிப்பது 2 உரிமைகள்.

  1.  வணிக உரிமை (Economic rights)
  2. அறம் சார்ந்த உரிமை (Moral rights)

காப்புரிமையின் அளவில்லா வணிகத்தன்மையை என்னால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. உங்கள் அறம் சார்ந்த உரிமைகளை நான் மதிக்கிறேன்.

— படைப்பு ‘திருடன்’.

பிகு: ‘ஏழை’ – படைப்பின் விலைக்கேற்ப மாறுவது.

Leave a comment